இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆசியக் கோப்பைக்கு முன்பாக அயர்லாந்து அணியோடு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து சில மூத்த வீரர்கள் டி20 பார்மட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வர் குமார்:
அணியில் ஏகப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் புவனேஷ்வர் குமாரின் 2023 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு இனிமேல் அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதான ஒன்றுதான்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் அதன் பிறகு இந்தியாவுக்காக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவரின் பந்துவீச்சு திறனும் குன்றியது. ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதோடு அவர் டி20 போட்டிகளிலில் இருந்து ஓய்வை அறிவிப்பது பற்றி யோசிப்பார் என்று நம்பப்படுகிறது.
தினேஷ் கார்த்திக்:
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும்படி விளையாடததால் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறினாலும் இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்கள் இருப்பதால் இனிமேல் தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. 38 வயதான அவர் தனது கிரிக்கெட் கரியரின் இறுதி கட்டத்தில் இருப்பதால் அவர் விரைவில் டி20 போட்டிகளில் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
கடைசியாக 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அஸ்வின், அதன் பிறகு இந்திய அணி சார்பில் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு மட்டும் டி20 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்டுவதால் 36 வயதாகும் அஸ்வினுக்கு டி20 போட்டிகளில் இடம் கிடைப்பது சற்று கடினம் தான். அதே சமயம் அவருக்கு சில பிட்னெஸ் பிரச்சனைகள் உள்ளன. சமீபத்தில் அவர் தன்னுடைய முழங்கால் பிரச்சனை பற்றி பேசியிருந்தார். அதனால் இப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் விதமாக டி20 போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.