மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு பலரின் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் உலகளவில் ரூ.400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்க எம்.ஜி.ஆர், மனோபாலா, கமல்ஹாசன் போன்ற பலரும் முயன்று வந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் கைக்கூடாத நிலையில் மணிரத்னத்திற்கு கைக்கூடியது.
“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்கத் தொடங்கினாலே அந்த முயற்சி தடைப்பட்டுவிடும் என்ற ஒரு பயம் சினிமாத்துறையினருக்கு இருந்தது. அந்த பயத்தை மணிரத்னம் உடைத்துக்காட்டிவிட்டார். “பாகுபலி” படத்தின் தூண்டுதலினால் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” படத்தை இயக்கினார் என்றாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற பல வரலாற்று நாவல்களை அடிப்படையாக வைத்து படமெடுப்பதற்கான தொடக்கமாக “பொன்னியின் செல்வன்” அமைந்திருக்கிறது.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வெளிவருவதற்கு முன்பு ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதே போல் முதல் பாகம் வெளிவந்தபோது கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.
அதே போல் இரண்டாம் பாகத்தையும் தற்போது கண்டுள்ளார் கமல்ஹாசன். அவருடன் இசையமைப்பாளர் தேஸ்ரீ பிரசாத், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் சேர்ந்து திரைப்படத்தை பார்த்தனர். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் கமல்ஹாசன்.
அந்த பேட்டியில் “முதலில் நான் ஒரு சினிமா ரசிகன். அதற்கு பிறகுதான் நான் சினிமா கலைஞன். என்னுடைய ஆசை எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும் என்பதுதான். அது நல்ல சினிமாவாக இருக்கவேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது” என பாராட்டிய அவர்,
“எல்லா திரைப்படங்களுக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அதே போல் இத்திரைப்படத்திற்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் மக்கள் இந்த படத்திற்கு அமோக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்” எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.