ஆஷஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று முடிந்த இரண்டாவது போட்டியில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடியும் அந்த அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 7 ஆவது பேட்ஸ்மேனாக இறங்கிய பேர்ஸ்டோ 10 ரன்கள் சேர்த்திருந்த போது பந்தை தடுத்து ஆடிவிட்டு கிரீஸில் பேட்டை வைக்காமல் எதிர்முனை நோக்கி நடந்து சென்றார். அப்போது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்புகளை நோக்கி அடித்து ஸ்டம்ப் இட்டுக்கு அப்பீல் செய்தார்.
வேகப்பந்துவீச்சில் யாரும் ஸ்டம்ப் இட் செய்யமாட்டார்கள் என்று அலட்சியமாக இருந்த பேர்ஸ்டோ, இப்படி தன்னுடைய விக்கெட்டை இழந்தார். ஆனால் இங்கிலாந்து ரசிகர்கள் இப்படி விக்கெட் எடுத்ததை ‘சீட்டிங்’ எனக் கத்தி ஆஸி அணிக்கு எதிராக ஆரவாரம் செய்தனர். இதனால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பானது.
இந்நிலையில் இந்திய ரசிகர்கள் இப்போது இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி எடுத்த சிறப்பான முடிவை பாராட்டி வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டி ஒன்றில் இயான் பெல் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றபோது பந்தை தடுத்த பிரவீன் குமார் பந்து பவுண்டரி லைனை தொட்டு விட்டதாக நினைத்து பொறுமையாக எடுத்து வீசினார்.
பந்து பவுண்டரிக்கு சென்று விட்டதாக நினைத்த பெல்லும், கிரீஸை தொடாமல் எதிர்முனைக்கு சென்றார். பந்தை பிடித்த இந்திய வீரர் ஸ்டம்ப்பை தட்டி விக்கெட் கேட்டார். டிவி ரிப்ளையில் பந்து பவுண்டரி லைனை தொடவில்லை என்பது தெரிந்து அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெல் சோகத்தோடு பெவிலியன் திரும்பினார்.
ஆனால் தேநீர் இடைவேளை முடிந்த இயான் பெல் மீண்டும் வந்து பேட் செய்தார். தோனி நடுவர்களிடம் தங்கள் அப்பீலை திரும்ப பெற்றுக் கொள்வதாக சொல்லி பெல்லை மீண்டும் விளையாட அழைத்திருந்தார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணியைப் பாராட்டி கைதட்டி தோனியின் முடிவை வரவேற்றனர். இப்போது பேர்ஸ்டோ விக்கெட் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் தோனியின் அந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.