ஐபிஎல் தொடரில் பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான போட்டி தான் தற்போது நடந்து முடிந்தது. ஒன்பது போட்டிகள் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் விளங்கும் ராஜஸ்தான் அணியும், இந்த சீசனில் பல அணிகளுக்கு எதிராக இருநூறு மற்றும் 250 ரன்களுக்கு மேல் குவித்து அசாதாரண அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ஓவர்கள் முடிவில் 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் அந்த அணி 180 ரன்கள் வரை சேர்க்கும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி 12 ஓவர்களில் அவர்களின் பேட்டிங் அப்படியே தலைகீழாக மாறி இருந்தது. நிதிஷ் ரெட்டி அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்க துணையாக அதிரடியை கையில் எடுத்திருந்த ஹென்ரிச் கிளாஸன், 19 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 201 ரன்களைத் தொட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி ஒரு ரன் சேர்ப்பதற்குள் சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோரின் விக்கெட்டை இழந்திருந்தது. இருவரும் டக் அவுட்டாக, ராஜஸ்தான் அணி தோற்றுவிடும் என்றும் கருதப்பட்ட நிலையில் பின்னர் கைகோர்த்த இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிக அழகாக ஆடி ரன் சேர்த்தனர்.
ரன் ரேட் குறையாமல், அதே வேளையில் விக்கெட்டுகளையும் விழாமல் பார்த்துக் கொண்ட இவர்கள் இருவரும் இணைந்து 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதில் ஜெயிஸ்வால் 67 ரன்களும் ரியான் பராக் 77 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகி இருந்தனர்.
இதனால் போட்டி மீண்டும் விறுவிறுப்பை உருவாக்க, கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது. 19-வது வரை கம்மினிஸ் வீச முதல் பந்திலேயே ஜுரல் அவுட்டாகி இருந்தார். மேலும் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 13 ரன்கள் வேண்டுமென்ற நிலை இருந்தது.
புவனேஸ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி பந்தில் 2 ரன்கள் வேண்டும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் முடிவை அறியும் ஆவலில் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். இந்த பந்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போவெல் எல்பிடபுள்யூ ஆக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்வியின் மூலம் துவண்டு போன ஹைதராபாத் அணிக்கு இந்த வெற்றி அதிக உத்வேகத்தை கொடுத்துள்ளது. மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதி இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஒன்றில், கடைசி பந்தில் 2ரன்கள் வேண்டுமென்ற நிலை சென்னைக்கு உருவாகி இருந்தது. இந்த பந்தில் தாகூர் எல்பிடபுள்யூ ஆக, தற்போதும் அதே போன்று தான் போவெலும் அவுட்டாகி உள்ளார். இதனால், அந்த தோல்வியை நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் வருந்தும் நிலை உருவாகி உள்ளது.