- Advertisement 3-
Homeவிளையாட்டு4 ஓவர்கள் மெய்டன்.. அரிய சாதனை படைச்ச பெர்குசனுக்கு முன்னாடியே இப்படி ஒரு சம்பவம் செஞ்சது...

4 ஓவர்கள் மெய்டன்.. அரிய சாதனை படைச்ச பெர்குசனுக்கு முன்னாடியே இப்படி ஒரு சம்பவம் செஞ்சது யாரு தெரியுமா..

- Advertisement 1-

பொதுவாக டெஸ்ட் போட்டிகள் எல்லாம் வரும்போது ஐந்து நாட்கள் போட்டி நடைபெறுவதால் இதில் ஏராளமான மெய்டன் ஓவர்கள் வீசப்படுவதை நாம் அதிகம் கவனித்திருப்போம். ஆனால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் மெய்டன் ஓவர்கள் என்பதே மிக மிக அரிதாக தான் வீசப்படும். ஒரு நாள் போட்டியில் கூட ஆரம்பத்தில் ஒரு சில ஓவர்கள் மெய்டனாக வீசுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனைத் தாண்டி பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்படும் போது நடுவே கூட விக்கெட்டுகள் விழுந்து ஓவர்கள் மெய்டன் ஆவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். ஆனால் அதிரடி நிறைந்த டி20 போட்டிகளில் மெய்டன் ஓவர் என்பதே மிக மிக அரிதான விஷயமாக இருக்கும் சூழலில் தான், அனைத்து ஓவர்களையும் மெய்டனாக வீசி வரலாற்று சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன்.

குரூப் சி-யில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் காரணமாக தங்களின் சூப்பர் 8 வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்தது. இதனால் தங்களின் கடைசி லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்த்து ஆடி இருந்தது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, 20 ஓவர்கள் வரை ஆடியிருந்த போதும் அவர்களால் 78 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் ஆமினி 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மிக அட்டகாசமாக செயல்பட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தாலும் 13 வது ஓவரில் 79 ரன்கள் சேர்த்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தங்களின் டி20 உலக கோப்பை தொடரையும் வெற்றி பயணமாக மாற்றி உள்ளது.

- Advertisement 2-

இதனிடையே நியூசிலாந்து பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் செய்த தரமான உலக சாதனையை தற்போது பார்க்கலாம். நான்கு ஓவர்கள் பந்து வீசியிருந்த பெர்குசன், ஒரு ரன்னை கூட கொடுக்காமல் நான்கு மெய்டன் ஓவர்களுடன் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். இதன்மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரு ரன் கூட கொடுக்காமல் நான்கு மெய்டன் வீசிய முதல் வீரர் என்று அரிய சிறப்பையும் பெற்றுள்ளார்.

இன்னொரு பக்கம் சிறந்த எக்கானமி பந்துவீச்சாகவும் டி 20 உலக கோப்பையில் பெர்குசனின் பந்து வீச்சு அமைந்துள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் டிம் சவுதி, 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெர்குசனின் சாதனையை டி 20 உலக கோப்பைத் தொடரில் எட்டிப்பிடிப்பது கடினம் என்றாலும், இதனை ஏற்கனவே டி 20 உலக கோப்பைத் தகுதி போட்டியில் செய்து காட்டி உள்ளார் கனடா வீரர் சாத் பின் சாஃபர்.

கனடா மற்றும் பனாமா அணிகள், கடந்த 2021 ஆம் ஆண்டு மோதியிருந்த டி 20 போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய சாத் பின் சாஃபர், ஒரு ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்