- Advertisement -
Homeகிரிக்கெட்அவருக்கு எப்படி பந்து வீசறதுனே தெரியல... பவுலர்கள் எச்சரிக்கையா இருக்கறது தான் நல்லது - பாக்...

அவருக்கு எப்படி பந்து வீசறதுனே தெரியல… பவுலர்கள் எச்சரிக்கையா இருக்கறது தான் நல்லது – பாக் லெஜன்ட்ஸ் பேச்சு

-Advertisement-

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது அதே முமென்ட்டத்துடன் மீண்டும் அந்த அணியை வீழ்த்த காத்திருக்கிறது. அதேவேளையில் இதுவரை ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது என்கிற சாதனையை தகர்த்து முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்த காத்திருக்கிறது.

இப்படி இரண்டு அணிகளுமே வெற்றிக்கு முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசீம் அக்ரம் கூறுகையில் :

ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரிஸ்க் எடுக்காமல் பலமான ஷாட்டுகளை அவர் கச்சிதமாக விளையாடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் அவரிடம் கூடுதலான டைமிங் இருக்கிறது. எனவே அவரால் அனைத்து பந்துகளையும் மிகச் சிறப்பாக விளையாட முடிகிறது. விராட் கோலி நிதானத்துடன் விளையாடி வந்தாலும் ரோகித் சர்மா பீஸ்ட் போன்று அதிரடியாக விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.

-Advertisement-

அதனை தொடர்ந்து பேசிய மிஸ்பா உல் ஹக் கூறுகையில் : ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய விதத்தை பார்த்த பின்னர் மற்ற அணிகளுக்குமே கண்டிப்பாக அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் அவர் எப்படி பந்துவீசினாலும் பவுண்டரிகளாக விளாசுகிறார். குறிப்பாக ஆஃப் ஸ்டம்ப் பக்கம் பந்தை வீசினால் அதனை கட் செய்து பவுண்டரி அடிக்கிறார். நேராக பந்தை வீசினால் பவுலரின் தலைக்கு மேல் தூக்கி அடித்து பவுண்டரி விளாசுகிறார்.

ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் புல் ஷாட் மூலம் சிக்ஸ் அடிக்கிறார். இப்படி பந்து அவருக்கு எதிராக எவ்வாறு வந்தாலும் அதனை நேர்த்தியாக கையாளுகிறார் என்பதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் எப்படி பந்துவீச வேண்டும் என்பதே தெரியாமல் புலம்புகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய வாசிம் அக்ரம் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் 6 சதங்களையும், சங்கக்காரா 35 போட்டியில் 5 சதங்களும், பாண்டிங் 42 போட்டியில் 5 சதங்கள் அடித்துள்ளனர். அவர்களை காட்டிலும் தற்போது ரோகித் 19 போட்டியிலே 7 சதம் அடித்துள்ளது அபாரமான விடயம். எனவே அவருக்கு எதிராக பவுலர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்