- Advertisement -
Homeகிரிக்கெட்இனி தோனி ரூட்ல யாரும் கால் வைக்க முடியாது.. பிசிசிஐ கொடுத்த முக்கியமான கவுரவம்.. சச்சினுக்கு...

இனி தோனி ரூட்ல யாரும் கால் வைக்க முடியாது.. பிசிசிஐ கொடுத்த முக்கியமான கவுரவம்.. சச்சினுக்கு அடுத்து தல மட்டும் தான்..

-Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியை நிச்சயம் தோனிக்கு முன், தோனிக்கு பின் என பிரித்து விடலாம். அந்த அளவுக்கு இந்திய அணியில் தோனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு நடந்த ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரில் சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட் என பல நட்சத்திர வீரர்களை கொண்ட இந்திய அணி இருந்த போதும் லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி 20 உலக கோப்பைத் தொடர் அறிவிக்கப்பட, இளம் வீரர்களை கொண்ட அணியை தோனி தலைமையில் பிசிசிஐ களமிறக்கி இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் தோனியின் கேப்டன்சி சிறப்பாக அமைய, இறுதி போட்டியில் விறுவிறுப்பான கட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.

அதன் மூலம், தோனி என்ற கேப்டனின் சகாப்தத்தின் முதல் பக்கமும் எழுதப்பட்டது. இதன் பின்னர், தோனி தொட்டதெல்லாம் தங்கம் என்பது போல அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் அணி, சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டது. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸ், இன்னும் பலரின் கண் முன்னே ஓடி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று கொடுத்த தோனி, இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன் என பலராலும் முத்திரை குத்தப்பட்டார். இதன் பின்னர் கோலி தலைமையில் ஆடி வந்த தோனி, 2019 உலக கோப்பைத் தொடருடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானது இந்திய ரசிகர்கள் அனைவரையும் கலங்கடித்திருந்தது.

-Advertisement-

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆரம்பம் முதலே தலைமை தாங்கி வரும் தோனி, இதுவரை 5 கோப்பைகளை அந்த அணிக்காக வென்று கொடுத்துள்ளார். கடந்த சில ஐபிஎல் தொடர்களாகவே தோனி விரைவில் ஓய்வினை அறிவிப்பார் என ஒரு கருத்து பரவலாக இருந்து வரும் சூழலில், தனது 42 வது வயதில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை அவர் வழிநடத்த தயாராகி விட்டார்.

உலக கிரிக்கெட்டில் இன்னும் பல ஆண்டுகளுக்கு தோனி பெயர் நிலைத்து நிற்கும் என்ற சூழலில், அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. தோனியின் ஜெர்சி நம்பர் 7 என்பது அனைவரும் அறிந்ததே. அவர் ஓய்வினை அறிவித்த பின்னர், அந்த நம்பர் எந்த இந்திய வீரருக்கும் கொடுக்கப்படவில்லை.

தோனி என்றாலே 7 என்ற எண் ஞாபகம் வரும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த தோனிக்கு தற்போது பிசிசிஐ ஒரு கவுரவம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வினை அறிவித்த பிறகு, அவரது 10 ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வேறு யாரும் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல, தோனியின் 7 ஆம் நம்பரை இனி எந்த வீரர்களும் பயன்படுத்த கூடாது என தோனியை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், 7 ஆம் நம்பருக்கு இனி ஓய்வும் வழங்கப்பட உள்ளது.

-Advertisement-

சற்று முன்