முந்தைய ஐபிஎல் சீசன்களை போல இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் பாதி அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் பெற்றிருந்த மும்பை அணி, அடுத்து ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஒரு அணியாக அவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்து வரும் அதே வேளையில் தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய ஒரு சாதகமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
மும்பை அணி என்றாலே எப்போதும் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருந்து வெற்றிகளை குவிக்கும் நிலையில் இந்த முறை அப்படியே நேர்மாறாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்று போட்டியிலும் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா.
அதிக ரன்களை கொடுக்காமல் விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அசத்தி வரும் பும்ராவை தவிர மற்ற மும்பை பந்து வீச்சாளர்கள் யாரும் அந்த அளவுக்கு எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அதே போல பேட்டிங்கிலும் கூட தொடர்ச்சியாக அனைவரும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்து வரும் நிலையில், காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகள் ஆடாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், கடைசி நான்கு போட்டிகளில் ஆடி இருந்தார்.
இதில் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான சூர்யகுமார், மற்ற இரு போட்டிகளில் அதிரடியாக ஆடி அரைச்சதம் அடித்து பட்டையை கிளப்பி இருந்தார். சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் 78 ரன்கள் அடித்திருந்த சூர்யகுமார் யாதவ், மும்பையின் ரன் அதிகமாக எகிறவும் காரணமாக அமைந்திருந்தார்.
இதனிடையே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் அடித்ததும் சூர்யகுமார் ஹர்திக் பாண்டியாவை நோக்கி காட்டிய சைகையும் அதற்கு ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்சன் பற்றியும் தற்போது பார்க்கலாம். ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமார் 34 பந்துகளில் அரை சதம் அடித்ததும் அங்கே மைதானத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பார்த்து நான் இருக்கிறேன் என்பது போல தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சைகை காட்டி இருந்தார்.
இதனை கவனித்த ஹர்திக் பாண்டியா உற்சாகமடைந்துடன் மட்டும் இல்லாமல் சூர்யகுமாரின் பேட்டிங்கிற்கு கைதட்டி வரவேற்பையும் கொடுத்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மனதையும் நெகிழ வைத்து வருகிறது.
ஏற்கனவே மும்பை அணியில் வீரர்கள் தனித்தனி குழுக்களாக இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக சூர்யகுமார் சைகை கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.