- Advertisement 3-
Homeவிளையாட்டுதங்க செயினை விற்ற தாய்.. கடன் வாங்கி கிரிக்கெட் பேட் வாங்கிய அப்பா.. இந்திய அணியில்...

தங்க செயினை விற்ற தாய்.. கடன் வாங்கி கிரிக்கெட் பேட் வாங்கிய அப்பா.. இந்திய அணியில் இடம்பிடித்த இளம்வீரரின் இன்ஸ்பயரிங் ஸ்டோரி

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் காண இரு அணிகளிக்குமே இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமாகி மார்ச் 11 ஆம் தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதலை எதிர்த்து இந்திய மண்ணில் ரன் சேர்க்க திட்டங்களை வகுத்து வருவதாக தெரிகிறது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்து வரும் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராகவும் அதே பாணியை பின்பற்ற போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், ஆவேஷ் கான் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தெ. ஆ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த முறை தேர்வாகவில்லை. அதே போல, தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி இரட்டை சதமடித்த புஜாராவையும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி சேர்க்கவில்லை. இவரை போலவே ரஞ்சி தொடரில் பட்டையை கிளப்பி வரும் புவனேஷ்வர் குமார், சர்பராஸ் கான் ஆகியோர் பெயரும் இடம்பெறாமல் போனது அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement 2-

ஆனால் அதே வேளையில் இளம் வீரர் ஒருவரின் பெயர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் தேர்வானது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல். இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடியதுடன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம்பிடித்திருந்தார். அதிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ஜுரேல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் அரைசதமடித்து அசத்தி இருந்தார்.

தனது பெயர் டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ளதால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார் 22 வயதே ஆகும் இளம் வீரர் துருவ் ஜுரேல். ஆனால் பல கஷ்டமான விஷயங்களை கடந்து தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். சிறு வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமென துருவ் விரும்பிய போது அவரது தந்தை அதனை பெரிதாக விரும்பவில்லை. அதே வேளையில், மகனுக்காக 800 ருபாய் கடன் வாங்கி கிரிக்கெட் பேட் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

தொடர்ந்து, கிரிக்கெட் கிட் வாங்க 7,000 ரூபாய் வரை ஆகுமென துருவ் ஜுரேல் தெரிவித்த போது, அவரை திட்டியதுடன் கிரிக்கெட்டை கைவிடும்படியும் அவரது தந்தை கண்டித்துள்ளார். ஆனால், அடம்பிடித்து பாத்ரூமில் கதவை அடைத்து துருவ் ஜுரேல் அழ, அவரது தாய் தங்க செயினை விற்று மகனுக்கு கிரிக்கெட் கிட்டை வாங்கி கொடுத்துள்ளார். இப்படி பல இக்கட்டான நிலையில் இருந்து உயர்ந்த இளம் வீரர், ரோஹித், விராட் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்களுடன் அணியில் இணைந்தது பலருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி உள்ளது.

சற்று முன்