- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர்

அஸ்வின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர்

- Advertisement 1-

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆடுகளம் தோய்வாக இருந்ததால் பந்து பேட்டிற்கு சரிவர வரவில்லை. நேற்று பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாகவும் இருந்தது. இதனால் பந்தின் பவுன்சும் பெரியதாக இல்லை. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் கையில் பந்து சென்றது.

ஆட்டத்தின் 12 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை கணிக்கத் தவறிய தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்ட் ஆனார். இதன் மூலம் அஸ்வின் ஒரு புதிய சாதனையை படைத்தார். தேஜ்நரைன் சந்திரபாலின் தந்தை ஷிவ்நரைன் சந்திர்பாலின் விக்கெட்டை 2013 ஆம் ஆண்டு அஸ்வின் வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலம் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் படைத்தார். இதேபோன்று ஆட்டத்தின் 16 வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் 20 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement 2-

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. இதேபோன்று ரேமன் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றினார். இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டு வர போராடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினை சேர்க்காமல் ரோகித் சர்மா கை விட்ட நிலையில் தற்போது அணிக்கு திரும்பியவுடன் முதல் செஷனிலே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் அனைவருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 699 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் ஒரு விக்கெட்டை அவர் எடுத்தால் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு சேரும். இதற்கு முன்பு கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங், இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார்.

சற்று முன்