- Advertisement -
Homeகிரிக்கெட்ரோஹித்துக்கு பதில் ஹர்திக்.. மும்பை அணியின் முடிவால் மனமுடைந்த சூர்யகுமார்?.. உச்சக்கட்ட வேதனையில் MI ரசிகர்கள்..

ரோஹித்துக்கு பதில் ஹர்திக்.. மும்பை அணியின் முடிவால் மனமுடைந்த சூர்யகுமார்?.. உச்சக்கட்ட வேதனையில் MI ரசிகர்கள்..

-Advertisement-

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்த முடிவை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறது. மும்பை அணிக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மா, அந்த அணி ஐந்து கோப்பைகளை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் என நிச்சயம் ரோஹித் ஷர்மாவை சொல்லலாம்.

அந்த அளவுக்கு மும்பை அணிக்காக உழைத்து ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணி என பெயர் எடுக்க வைத்ததில் ரோஹித் பங்கு மிகப்பெரியது. அப்படி இருக்கையில், 2024 ஆம் ஆண்டுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை மும்பை அணிக்காக ஆடி வந்த ஹர்திக்கை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக உள்ளே வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி டிரேடிங் முறையில் புதிய கேப்டனாக நியமித்திருந்தது.

முதல் சீசனிலேயே சிறப்பாக தலைமை செய்த ஹர்திக் பாண்டியா, குஜராத் அணி கோப்பையை வெல்லவும் உதவி செய்திருந்தார். தொடர்ந்து 2023 ஐபிஎல் சீசனில், இறுதி போட்டி வரை குஜராத் அணி தகுதி பெற்றிருந்தது. இந்த நிலையில் தான், அவர் மும்பை அணியில் இணைய விருப்பம் தெரிவிக்க, குஜராத் அணி நிர்வாகமும் இதற்கு அனுமதி அளித்ததால் மீண்டும் தாய் வீட்டிற்கே வந்து சேர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

இதனிடையே, சிறந்த கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை மாற்றி அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது மும்பை. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாகி உள்ளது, மும்பை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் மும்பை அணியை பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

-Advertisement-

மேலும், இனிமேல் மும்பை அணிக்கு ஐபிஎல் தொடரில் ஆதரவில்லை என்றும் அவர்களின் ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டு வருவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அந்த அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து மாற்ற நினைத்தால், மும்பை அணியில் இருக்கும் பும்ரா, சூர்யகுமார் உள்ளிட்டோருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம் என்றும், எதற்காக குஜராத் அணியில் இருந்து மீண்டும் ஹர்திக்கை இணைத்து கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், உடைந்து இருக்கும் இதயத்தின் எமோஜியை (💔) மட்டும் பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேறு எதுவும் குறிப்பிடாமல் கேப்டன்சியை மாற்றிய நேரத்தில் அவர் பகிர்ந்த இந்த குழப்பமான ஸ்டோரி, ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது பிடிக்காமல் தான் என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்