உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ஐந்துமுறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எளிதாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா என அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. குறிப்பாக பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணியின் செயல் அட்டகாசமாக இருந்தது.
ஒருகட்டத்தில் 125 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இலங்கை அணியை அபாரமான பந்துவீச்சு, பீல்டிங்கால் 209 ரன்களுக்கு சுருட்டியது. பீல்டிங்கில் அங்கும் இங்கும் பிசியாக இருந்த வார்னர் இரண்டு அற்புதமான கேட்ச்சை பிடித்தார். பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வார்னர் பேட்டிங்கில் சொதப்பினார்.
அதுமட்டுமட்டுமின்றி தனக்கு அவுட் வழங்கியதால் களத்தில் பொறுமையை இழந்த வார்னர் அம்பயரை திட்டினார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமீபகாலமாக களத்தில் பொறுமையாக இருந்துவந்த வார்னரா இப்படி நடந்துகொண்டார் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, மதுஷங்கா பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். பந்து நிச்சயம் லெக் ஸ்டெம்பை மிஸ் செய்திருக்கும் என நினைத்து அம்யரின் முடிவுக்கு எதிராக வார்னர் ரிவ்யூ எடுத்தார். ஆனால் ரிவ்யூவில் அது அம்பயர்ஸ் கால் என வந்ததால் அவுட் என்ற தீர்ப்பே கொடுக்கப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த டேவிட் வார்னர் பொறுமையை இழந்தது மட்டுமின்றி அம்பயரை திட்டியபடியே பெவிலியன் திரும்பினார். வார்னரின் இந்த செயலை கண்டு கமெண்ட்ரியில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங் அதிர்ச்சியடைந்தார். மேலும், வார்னர்தான் பந்தை தாமதமாக ஆடினார். அம்பயர் இல்லை. இதற்காக அவர் ஏன் கோபமடைந்தார் என எனக்கு தெரியவில்லை
ஒருவேளை அம்பயர் அவருக்கு சாதமாக நாட் அவுட் என கூறியிருந்தால், இலங்கை அணி ரிவ்யூ எடுத்திருக்கும். அதிலும் அம்பயர்ஸ் கால் என வந்திருக்கும். வார்னரும் ஆட்டமிழக்காமல் தப்பித்தியிருப்பார். இதனால் அவர் கோபமடைய எந்த அவசியமும் இல்லை என கமெண்ட்ரியிலேயே வார்னரை விமர்சித்தார்.