பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கேப்டன் பாபர் ஆசமுக்கு அடுத்த படியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வீரராக உள்ளார் முகமது ரிஸ்வான். 29 வயதாகும் அவர் பாகிஸ்தானின் பேட்டிங்கை கடந்த சில ஆண்டுகளாக பலம் மிக்கதாக மாற்றி வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் தோற்றது. அந்த போட்டியில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் கூட்டணி விக்கெட் இழப்பின்றி இந்திய அணியை வெற்றி பெற்றது. அப்போது முதல் இந்திய ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்படும் பாகிஸ்தான் வீரராக ரிஸ்வான் உள்ளார்.
இந்த நிலையில் முகமது ரிஸ்வான், அமெரிக்காவில் அவரின் ஒரு செயலால் கிரிக்கெட் உலகில் மீண்டும் கவனம் ஈர்த்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது அணி வீரரும் கேப்டனுமான பாபர் ஆசாமுடன் நிர்வாகக் கல்வித் திட்டத்தில் பங்கேற்றார் ரிஸ்வான்.
அப்போது ஜூன் 3 ஆம் தேதி முகமது ரிஸ்வான் அமெரிக்காவில் தெருவில் தொழுகை நடத்தும் வீடியோ வைரலாகி, நேர்மறை மற்றும் எதிர்மறையான கமெண்ட்களை பெற்றுள்ளது. 20 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் வைரலானது.
இதைப் பார்த்த சிலர் ரிஸ்வானின் மதம் மீதான அர்ப்பணிப்பைப் பாராட்டினர் மற்றும் மதக் கடமைகளைக் கடைப்பிடிப்பதில் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டினர். இன்னொரு நபர் ரிஸ்வானின் இந்த செயல் அழகானது. மாஷா அல்லா. அவரின் செயல் உத்வேகம் அளிக்கக் கூடியது எனக் கூறியுள்ளார்.
இன்னொரு ரசிகர் “ரிஸ்வான் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், அமைதியாக தொழுகையை நடத்துகிறார். அவர் சத்தமாக எந்த ஸ்லோகன்களையும் சொல்லி யாரையும் தொந்தரவு செய்யவில்லை” எனக் கூறியுள்ளார். ஆனால் ரிஸ்வானின் இந்த செயலுக்கு விமர்சனங்களும் வராமல் இல்லை. வீடியோவை பார்த்த ஒரு சிலர் “ பிரார்த்தனை செய்வதற்கு பொருத்தமான இடம் இதுவல்ல” தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளும் திறமை ரிஸ்வானுக்கு உள்ளது. இதெல்லாம் வீண் விளம்பரம் என விமர்சித்துள்ளனர்.