கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தான் பேட் கம்மின்ஸ். இவர் நடப்பு ஐபிஎல் தொடருக்காக கடந்த மினி ஏலத்தில் ஹைதராபாத் அணியால் 20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக ஹைதராபாத்தின் புதிய கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஹைதராபாத் அணியை ஏற்கனவே வழி நடத்தி வந்த மார்க்ரம் சிறப்பாக வழி நடத்தவில்லை என்றபோதிலும் அவர் இதே சன்ரைசர்ஸ் அணியை SA 20 தொடரில் சிறப்பாக வழிநடத்தி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்ற உதவியிருந்தார். அதே மேஜிக்கை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் திடீரென அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றி பேட் கம்மின்ஸை புதிய கேப்டனாக்கி இருந்தது கடும் விமர்சனத்தையும் சந்தித்தது.
இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி பந்தில் ஹைதராபாத் தோல்வி அடைந்த போது இந்த விமர்சனம் இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் மும்பை அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடியதுடன் தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார் பேட் கம்மின்ஸ்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவான நிலையில் அந்த அணியில் இடம்பிடித்திருந்த ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாஸன் என அனைவருமே குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்து பல சாதனைகளையும் நொறுக்கி இருந்தனர்.
இதனால் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோரை முந்தி தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரலாறு படைத்திருந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் யாரும் தொடாத இலக்கு என்ற போதிலும் இதனை நோக்கி ஆடிய மும்பை அணி மிகச் சிறப்பாக அடி 10 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து சில ஓவர்களை ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீச கடைசியில் மூன்று ஓவர்களில் 68 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் உருவானது. இதனை அடிக்க முடியாமல் போக, மும்பை அணி 246 ரன்கள் எடுத்ததால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இதற்கு பின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், “இந்த போட்டி முழுக்க பந்து அங்கும் இங்கும் சுழன்று கொண்டே இருந்தது. மும்பை அணியினர் எப்போது எல்லாம் பவுண்டரிகள் தேவைப்படுகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அவர்கள் அடிக்கவும் செய்தார்கள். ஆனால் நாங்கள் போட்டியை சிறப்பாக முடித்து வைத்தோம். இளைஞர் அபிஷேக் ஷர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை ஆடியது என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
ஐபிஎல் போட்டி என வந்து விட்டால் நாம் அதிக நெருக்கடியுடன் ஆடுவோம். ஆனால் அவர் மிக சுதந்திரமாக ஆடி ரன் சேர்த்தார். நாங்கள் முதல் இன்னிங்சில் 270 ரன்கள் அடிப்போம் என நினைத்து பார்க்கவில்லை. ஆனால் பாசிட்டிவ் ஆகவும், அதே வேளையில் ஆக்ரோஷத்துடனும் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதிக ரன்கள் அடிக்கும்போது பந்து வீச்சிலும் நிறைய திட்டங்களை தெளிவாக வகுத்திருக்க வேண்டும்.
அதுதான் மிக முக்கியம். எங்களுடைய ஹோம் கிரவுண்ட் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது. மிக அதிக ஆர்வத்துக்கு நடுவில் ரசித்தபடி போட்டியை ஆடியிருந்தேன்” என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.